Monday, August 23, 2010

இன்னொரு பிறவி எனக்கு வேண்டாம்!

அடுக்கு மாடிக்கும் அடுக்கு மாடிக்கும்
விமானம் பறக்கும்

சாலைகளனைத்தும் பாலங்களாலேயே
பின்னப்பட்டிருக்கும்

செயற்கை பூக்கள் இயற்கையாய் கிடைக்கும்
பால் புளிக்க பாக்டீரியா கிடைக்கும்

 மனிதன் உணவை நுண்ணுயிரிகள் படைக்கும்
மாத்திரைகள் இரண்டு மதிய உணவுக்கு
காலை ஒன்று மாலை ஒன்று
மலிவு விலையில் மளிகையில் கிடைக்கும்

அம்மா ரோபோட் குழந்தை வளர்க்கும்
ஆசான் ரோபோட் பாடம் நடத்தும்
குழந்தையோ மாணவன் ரோபோட்டாய் மாறி நிற்கும்

எந்திரங்களோடு எந்திரங்கள் ஆவர் மனிதரும்
மனிதம் மறக்கப்பட்டிருக்கும்

செல்போன்கள் செல்லப் பிராணிகளாகும்
அவற்றின் ஒலிகளே தேனிசையாகும்

காலையில் ஒரு மணி எழுப்பிவிடும்
கம்ப்யூட்டர் ரோபோட் காபி கொடுக்கும்
மாலையில் ஒரு மணி தூங்கச் சொல்லும்

மருந்துகள் ஒழிந்து போகும்
மரபணுக்கள் நோய் தீர்க்கும்

கண்ணாடிச் சாலையில்
கார்கள் வழுக்கும்
ஹார்ன் சத்தமே காற்றில் சுற்றும்

புற்கள் பூண்டுகள் புதைந்து போகும்
கண்ணாடித் தரைகள் மலிந்து போகும்

மனிதர்கள் காண்பது அதிசயமாகும்
விலங்குகள் நிலை கேட்கவா வேண்டும்

கடல்நீரே குடிநீராகும் -அவை
செவ்வாய்க்கு ஏற்றுமதி ஆகும்

பக்கத்து வீட்டாரோடு பேச
சாட்டலைட் போய் சேதிவரும்

சிரிப்பூட்டும் வாயு சேஷேயில் கிடைக்கும்
செயற்கை சிரிப்பு காதைக்கிழிக்கும்

ஓசோனில் ஓட்டை அடைக்க
சந்திரனில் சபை கூடும்

அரிவாள் கத்தி அழிந்து போகும்
அணுகுண்டே ஆயுதமாகும்

இயற்கை, அன்பு இவை
இரண்டும் இல்லாத
இடத்தில் இன்னொரு பிறவியா?
எனக்கு வேண்டாம்.

மழை....!

மழை....!

என் தனிமையின்போதிய
மழை.
-எவ்வளவு இதம்?

ஒவ்வொரு மழையிலும் நனைந்து போகிறேன்
மழை படாமலும் கூட!

எப்போதுமே இரவு மழையின் எதிரி நான் 
கண்டு ரசிக்கமுடியாமையால்!

மழையின் சாரலில் மனதும் நனைந்துபோகும்

பெண்ணே
நீ நனையும் பொது மட்டும் நனைந்து போகிறது மழை!

Saturday, August 14, 2010

ashok kavithaigal -aval patriye anaithum

காதல்!!!

என் வெற்றுப் பக்கங்களாய் நீ!

எழுத வேண்டியது,

நீயா?

நானா? 

ashok kavithaigal

அவள் பற்றியே அனைத்தும்!!!

குங்குமம் எடுத்து
நெற்றியில் ஒற்றிக்கொண்டாய்!

உதிர்ந்த குங்குமமெல்லாம் ஓன்று சேர்ந்து
உன் மூக்கின் மேல் விழுந்து
ஆறுதல் கொண்டது!! 

முத்தம்

உனக்கும் எனக்குமான

நினைவுகளின்

பசுமரத்தாணி

உன் முத்தம்

**********************************

நம் ஆழ்ந்த அன்பின்

அன்பளிப்பு

உன் முத்தம்

**********************************

உன் ஒற்றை முத்தம் போதும்

சில பிரளயங்களை

நான் அடைவதற்கும்

சில போதனைகளின்

வேர் காண்பதற்கும்

*********************************

உன் இதழ்களை

எப்போதும் என் நீயே

ஈரப்படுத்துகிராய்

முத்தமிட நான் அருகிலிருக்கையில்

*********************************

எப்போதும் உன் முத்தங்கள்

ஏனோ சலிப்பதேயில்லை

*********************************

முற்றும் துறப்பதாய்

உன் ஒற்றை முத்தம்

********************************

வேறெதுவும் சொல்லிவிட முடியாதுன்

ஆழ்ந்த அன்பையும்

நம்பிக்கையையும்

-உன் முத்தத்தை தவிர

Monday, August 9, 2010

en kavithaigal

ரோஜாப் பூக்களை முட்களோடு  பார்க்கும் போதெல்லாம் உன் முகமும் உன் குணமும்தான் தோன்றுமெனக்கு!!!
தலைப்பைச் சேருங்கள்

ashok kavithaigal

அடகு வைக்கப்பட்ட ஆசைகள்!!

குருவிகளின் இரைச்சல் 
கிளிகளின் கீச்சிடல் 
குயில்களின் கூவல்
மண்பானைத் தண்ணீர் 
ஆற்றுக்குளியல் 
காலைப் பனிச்சாரல் 
இவற்றை விட 
அம்மாவின் அன்புக்கவனிப்பு
நகரத்து வேலைக்காக 
இத்தனையும்
அடகு வைக்கப்பட்டிருக்கின்றன 
வாகன இரைச்சல்களிடமும்
புகைகளின் எரிச்சல்களிடமும் 
துர்நாற்றக்காற்றிடமும் 

-வெறும் ஐந்தாயிரம் ரூபாய்க்காக.

ashok kavithaigal

விதைக்கப்பட்டவை ...


எண்ணங்களின் வயல்வெளிகளில்
விதைக்கப் படுகின்றன 
உன்னைப்பற்றிய நினைவுகள்!

முளைப்பதாயினும் கருகுவதாயினும்
உன் வார்த்தைகளிடமே!

என் வாழ்க்கையையும் சேர்த்து!!

ashok kavithaigal

காலவெள்ளத்தில்...
உன்னை பற்றிய எண்ணங்களை
எழுத முடிவதில்லை!!
உன் தூய உறவை யாரிடமும்
தெளிவாக விளக்க முடிவதில்லை!!
உன் நலம் பற்றிய சிந்தனைகளிலிருந்து
விடுபட முடியவில்லை!!
உன் அருகிலேயே இருந்து கள்ளமில்லா
அன்பை அறியமுடியவில்லை!!
விதிகளின் விவாதத்திற்க்கிடையில்  சிக்கியிருக்கும்
உன்னை விடுவிக்க ஒரு வழியில்லை!!
நம் வாழ்வு விருப்பு வெறுப்புக்களுக்கு
அப்பாற்ப்பட்டதாய் கடந்து கொண்டிருக்கிறது!!
 
கால வெள்ளத்தில் காகிதக் கப்பலாய் நாம்.


மனிதன்!
உருகும் பனித்துளியில்லை நீ
உதிக்கும் சூரியன்

விட்டில் பூச்சியில்லை நீ
விதைத்து முளைக்கும் விதை

வீரத்தின் விளைநிலமல்ல நீ
வெற்றியின் விளை களம்

தோல்வியால் துவள்பவனில்லை நீ
தன்னம்பிக்கையின் தளிர் முனை

காற்றில் மிதக்கும் நீர்த்திவளையில்லை நீ
கடலில் மிரட்டும் தீயலைகள்

உறங்கிக்கொண்டிருக்கும் கோட்டானில்லை நீ
ஆழ்ந்து நோக்கும் கழுகு

வீறு கொண்டெழும் வேங்கையில்லை நீ
தந்திரம் கொண்ட நரி

சாவு நோக்கி பயணிக்கும் உயிரில்லை நீ
மரணத்தை மரணிக்க வைக்கும் மனிதன் நீ