Thursday, September 1, 2011

முதற்காத்திருப்பு


முதற்காத்திருப்பு 
ஆசையும் அன்பும் கலந்ததாய்
ஒரு ஆயிரம் வண்ணத்துப்பூச்சிகளின் வருகையை
முன்னரே அறிந்துக் காத்திருக்கும் ஒரு சிறுபெண்ணைப்போல்
என்  முதல் காத்திருப்பு !
அர்த்தங்களே கூறமுடியா ஆயிரம் ஆயிரம் அற்புதக் காத்திருப்புகளுக்கெல்லாம் 
அற்புதமானது என் இந்த முதல் காத்திருப்பு !
எதனது  ஏக்கத்தையும் எதிர்பார்ப்பையும்
இதனோடு ஒப்பிட முடியாத
என் முதல் காத்திருப்பு !
உயிரினில் பாதியும் உடலினில் பாதியும் உருக்கிட்ட உருவம்
காணக் காத்திருக்கும் 
என் முதல் காத்திருப்பு
என் முதற்குழந்தைக்கான காத்திருப்பு
முகம் அது எப்படி நிறம் அது  எவ்வாறு
பாலினம் என்ன 
பண்பு அது எங்ஙனம் அறியக்காத்திருக்கும் 
அழகானக் காத்திருப்பு,
என் முதல் காத்திருப்பு.

மலர்களைக்கூட்டி மழைச்சாரலைக்கூட்டி மரங்களைக்கூட்டி
குருவியைக்கூட்டி குளிர் அருவியைக்கூட்டி 
ஆனந்தப் பறவையைக்கூட்டி
அறிவிப்புச் செய்திடுவேன்,
விழிகளில் ஒரு துளிநீர் வழிவதைப்பாரீர் 
அது என் மழலையைக்கண்டு மலங்கிய கண்ணீர்
அது மதிப்பிட முடியா ஆனந்தத்தண்ணீர் !

Tuesday, May 3, 2011

கண்ணீர் மையில் ஒரு கவிதை!


கண்ணீர் மையில் ஒரு கவிதை!

காற்றோடும் தென்னங்கீற்றோடும்
காட்டோடும் ஓட்டு வீட்டோடும்
கதை பேசி திரிந்தவன் நான்-என்னைக்
கவிபாட வைத்தவள் நீ!

பூவோடும் புன்னைக் கொழுந்தோடும்
தேனோடும் தீயின் நுனியோடும்
உன் நிறமென்று நினைத்தவன் நான்-என்
நிமிடத்தை நீட்டித்தவள் நீ!

ஆற்றங்கரையில் அருவிச்சாரலில்
கொட்டும் மழையில் கோப்பைத் தேநீரோடு
அருகில் நீயிருந்தாய்-அன்று
அமைதியாய் நானிருந்தேன்

காதலை நீதான் சொன்னாய்-ஒரு
காவியம் எழுதச் சொன்னாய்
காவியம் முடிக்குமுன்னே-நீயே
காதலை முடிக்கச் சொன்னாய்

காற்றிலே கலந்து வைத்தேன்-காதலைத்
தீயிலும் ஊற்றி வைத்தேன்
பூவிடம் சொல்லி வைத்தேன்-தினம்
புதுக்கவி பாடி வைத்தேன்

நான் இல்லாப் பொழுதுகளில்-முகம்
நாணியே நின்றிடுவாய்
காதலைச் சொல்லும் அவை-அன்று
காதிலே ஊற்றிக்கொள்ளேன்

தேவையின் உச்சமா-நீ
தேடலின் எச்சமா
ஆவியாய் திரிகையில்-நான்
அறியப்போகும் மிச்சமா?

ஆற்றிலே ஒருகால்-அந்தச்
சேற்றிலே ஒருகாலாய் நீ
என்னோடும் உன் தந்தையோடும்-நீ
தவிப்பது புரியுதடி

நேற்றையின் நிழலே நீயே-என்
காட்சியின் களங்கம் நீயே
உயிர் மூச்சிலே கரையுதடி-மனம்
பூவிலே புதையுதடி

மத்தியான நிழலாய்-நானும்
குறைவதாய் குறியும் கண்டேன்
மனுச்செய்ய நேரமில்லை-நீ
மனமிருந்தால் சிந்தித்துப்பார்

ஆவியாய் அலைந்திடுவேன்-உன்னை
அடிக்கடி தொல்லை செய்வேன்
பாவியாய் மாறி நிற்பாய்-நீயோ
படுக்கையில் உறங்கமாட்டாய்

அனைத்தையும் அறிகுவையோ?
அறிந்தாலும் புரிகுவையோ?