முதற்காத்திருப்பு
ஆசையும் அன்பும் கலந்ததாய்
ஒரு ஆயிரம் வண்ணத்துப்பூச்சிகளின் வருகையை
முன்னரே அறிந்துக் காத்திருக்கும் ஒரு சிறுபெண்ணைப்போல்
என் முதல் காத்திருப்பு !
அர்த்தங்களே கூறமுடியா ஆயிரம் ஆயிரம் அற்புதக் காத்திருப்புகளுக்கெல்லாம்
அற்புதமானது என் இந்த முதல் காத்திருப்பு !
எதனது ஏக்கத்தையும் எதிர்பார்ப்பையும்
இதனோடு ஒப்பிட முடியாத
என் முதல் காத்திருப்பு !
உயிரினில் பாதியும் உடலினில் பாதியும் உருக்கிட்ட உருவம்
காணக் காத்திருக்கும்
என் முதல் காத்திருப்பு
என் முதற்குழந்தைக்கான காத்திருப்பு
முகம் அது எப்படி நிறம் அது எவ்வாறு
பாலினம் என்ன
பண்பு அது எங்ஙனம் அறியக்காத்திருக்கும்
அழகானக் காத்திருப்பு,
என் முதல் காத்திருப்பு.
மலர்களைக்கூட்டி மழைச்சாரலைக்கூட்டி மரங்களைக்கூட்டி
குருவியைக்கூட்டி குளிர் அருவியைக்கூட்டி
ஆனந்தப் பறவையைக்கூட்டி
அறிவிப்புச் செய்திடுவேன்,
விழிகளில் ஒரு துளிநீர் வழிவதைப்பாரீர்
அது என் மழலையைக்கண்டு மலங்கிய கண்ணீர்
அது மதிப்பிட முடியா ஆனந்தத்தண்ணீர் !

No comments:
Post a Comment