Thursday, November 18, 2010

அசோக் கவிதைகள்-புரிதல்...(ஒரு தோழியும் தோழனும் எழுதிக்கொண்ட நட்புக் கடிதம்)

புரிதல்...
(ஒரு தோழியும் தோழனும் எழுதிக்கொண்ட நட்புக் கடிதம்)

உன்னதத்தில் உரித்தெடுத்த என் உயிர் நண்பா!

அன்பான தொடுதலுக்கும்
காமமாய் தீண்டுதலுக்கும்
பேதம் கற்பித்தவனே!

நீ விதைத்த விதை
வேர் மட்டுமன்றி 
விழுதுகளும் ஊன்றி 
நிற்பதறிவாயா?
 காண்போர் கண்களில் ஒட்டிக்கொள்ளும் 
பருவப்பசை தடவிய
என் உடலுக்குள் இருக்கும் 
உள்ளத்தை உணர்ந்தவன் நீதான்.

பருத்த என் சதைக்குள் இருக்கும் 
என் இதயத்தை இனம்கண்டவனும் நீதான்.

உன் அன்பால் எனக்கு ஆறுதல் சொல்லி
அர்த்தத்தோடு நிற்கிறாய் நீ மட்டும்.

உன் அன்புக்கு அடிமை நான்
என்னை திட்டித்தீர்ப்பதென்றாலும்
வெட்டிக்கூறுபோட்டெரிவதென்றாலும் 
நீயே செய்.

உன் நட்பு 
என் கற்பைவிட பெரிதெனக்கு.

என் தவமெல்லாம் 
ஆயுள் முழுதும் 
உன் அருகாமை வேண்டும் 

தோழனுக்காய் வாழ்க்கையை துறந்தவள்
நானாக வேண்டும்.

பெண்ணே.....
உன் தவத்துக்கு வரமளிக்க
கடவுளல்லன் நான்.

உன் உணர்வுகளுக்கெல்லாம் 
உயிர்கொடுக்க
என் ஒரு வரி பதில்
என் விழியோரம் வழியும் கண்ணீர் எழுதும்.

உன்னையும் என்னையும் போல் 
ஓராயிரம் பேரிருக்கலாம்
இவ்வுலகில்.
ஆனால்,
நம் நட்பு மட்டும் 
யாரும் புரிந்து கொள்ளமுடியா
புரிந்து கொள்ளல்!

1 comment:

  1. சத்தியமா சொல்றேன்...கொஞ்சம் தான் புரிஞ்சுது மத்தபடி ஒண்ணுமே புரியலத்தான்...

    ReplyDelete